Tuesday, July 25, 2017

பூனைகள்




முதன்முதலில் பூனைகளோடு எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்று நினைவில்லை...நான் பிறப்பதற்க்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் பூனை இருந்து கொண்டுதான் இருக்கிறது....

                                          பூனைகள் சுவாரசியமானவை...வளர்ப்பு மிருகமாக இருந்தாலும், சற்றே திமிர் பிடித்தவைகள் என்பது என் அனுமானம்..நாய்களுக்கும் பூனைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாய் வீட்டில் உள்ள எல்லோரிடமும் நன்கு பழகும், சோறு வைப்பவர் எல்லாரும் சொந்தம் என்ற உயர்ந்த கொள்கை உடையது  உனக்கு என்னை பிடிச்சிருக்கா?? ஓகே அப்ப எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு!!!!! .என்ற பெரிய குணம் கொண்டது....
                                    ஆனால் பூனைகிட்ட அந்த மாதிரி பெருந்தன்மையெல்லாம் கிடையாது..." இங்க பார்..உனக்கு என்னை பிடிச்சிருக்குன்றதெல்லாம் எனக்கு முக்கியமில்ல..எனக்கு உன்னை பிடிக்குதான்றதுதான் முக்கியம்" அப்படிங்கற மாதிரிதான் அதோட நடவடிக்கை இருக்கும்.

                                  பொதுவா பூனை வளர்ப்பது ரொம்ப ஈசி...பூனைகுட்டிய பிடிச்சிட்டு வந்து வீட்ல விட்டுட்டா போதும்..அது பாட்டுக்கு வைக்கிறத தின்னுட்டு வளந்துரும்..சங்கிலியால கட்டிபோடனும், காலையில எழுப்பி கக்கா இருக்க வைக்கனும், ஷாம்பு போட்டு குளிப்பாட்டனும் போன்ற கஷ்டம்லாம் கிடையாது,  பூனைகள் ரொம்ப சுத்தமானவை...வெள்ளை நிறமென்றால் தூய வெள்ளை நிறம், கருப்பு நிறமென்றால் தூய கருப்பு நிறம் என தன் உடலை பராமரிக்கும்...அதனால அத பராமரிக்க  நாய் படாத பாடு படவேணாம்.. இதனாலேயே எனக்கு நாய்கள் மேல பெரிய ஈடுபாடு கிடையாது..

                                 
                   
                                  எங்க வீட்ல வளர்ந்த பூனைகளுக்கு நான மட்டுமே செல்லம்..வீட்ல நான் கடைக்குட்டி, அதனால அதிகாரம் பண்ற அதிகாரம் எனக்கு கிடைக்க வாய்ப்பில்லாததனால என்னோட அதிகார திமிர காட்டுறதுக்கு எனக்கு கிடைத்த அடிமைதான் பூனை..எங்க அண்ணன்ட்ட நான் அடி வாங்கினா என்னோட பதில் அடி என்னோட அடிமை பூனைக்கு தான் விழும்..அதுவும் " ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு "ங்கற மாதிரி அடிடா அடிடா ன்னு வாங்கிக் கொள்ளும்...என்னைத்தவிர வேற யார்கிட்டேயும் ஒட்டாது...ஸ்கூல் விட்டு வந்ததும் மொத வேலை பூனைய தூக்கி  கொஞ்சறது தான். அது சாப்பிடறது, தூங்கறது எல்லாம் என்னோட தான்...என்னைக்காவது கறி, மீன் வீட்ல சமைச்சாதான் மத்தவங்களோட கொஞ்சம் நட்பு பாராட்டும்...மத்தபடி நான் ஏற்கெனவே சொன்ன " இங்க பார்..உனக்கு என்னை பிடிச்சிருக்குன்றதெல்லாம் எனக்கு முக்கியமில்ல..எனக்கு உன்னை பிடிக்குதான்றதுதான் முக்கியம்" என்ற கொள்கை தான்...

                                    பூனைக்கும் எனக்கும் இருந்த இந்த நெருக்கம்லாம் எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் தான்..எனக்கு பிடித்த பூனை என் மனைவிக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை அல்லது பூனைக்கு என்னை பிடிச்சிருந்ததால வீட்டம்மாக்கு பூனையை பிடிக்காம போயிருக்கலாம், மொத்தத்துல. மனைவிக்காக நான் தியாகம் பண்ணுன உறவு .....பூனை....!!!!!!
             
                             பத்து வருசம் ஆனாலும் இப்பவும் எங்கேனும் பூனையை பார்த்தால் நின்று சில நொடிகள் ரசித்து விட்டுதான் செல்வேன்..

என் சிறு வயதில் நான் வளர்த்த குழந்தைகள்....பூனைகள்!!!!!

                               
                              

No comments:

Post a Comment